செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!
30 வகை அவசர சமையல்
"குடும்பத்தைப் பிரிஞ்சு வந்து, மேன்ஷன், ஹாஸ்டல்னு வாழற பேச்சிலர்ஸையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கக் கூடாதா? அதிக வேலையில்லாம... ஈஸியா சமைக்கற மாதிரியான ரெசிபிகளை எங்களுக்காகத் தரக்கூடாதா?"
- அடிக்கடி தொலைபேசி மற்றும் கடிதங்கள் வாயிலாக வந்துகொண்டே இருக்கும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்று... இங்கே சமைக்கப்படுகிறது 30 வகை அவசர சமையல்!
லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தாலும், லேட்டஸ்டா சமைக்கணும்; காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவறதுனு நிறைய வேலை வைக்கக் கூடாது; சிம்பிளா சமைச்சாலும், டேஸ்ட், சத்து இதெல்லாம் குறையக்கூடாது; தைரியமா ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து மனசார பரிமாறணும்.
- இதெல்லாமே பேச்சிலர்களின் எதிர்பார்ப்பு... கண்டிஷன்.
அதற்கு ஏற்ப... வகைவகையான பொடிகள், ஈஸியாக ரெடி செய்யக் கூடிய சாத வகைகள், அடுப்பையே பற்ற வைக்காமல் வயிறும் மனசும் நிறைவது மாதிரியான ரெசிபிகள் என அசத்தியிருக்கும் 'பட்ஜெட் சமையல்' பத்மா, ''பெரிய ஹோட்டல்ல, பர்ஸ் கரையற அளவுக்குச் சாப்பிடாலும், நம்ம கையால சமைச்சது மாதிரி வருமா? இந்த ரெசிபிகளை சமைச்சுப் பாருங்க... 'அட, அம்மா கைப்பக்குவம்'னு சப்புக் கொட்டுவீங்க'' என அடித்துச் சொல்கிறார்.
ச்சும்மா பூந்து விளையாடுங்க ஃப்ரெண்ட்ஸ்!
மல்டி பருப்புப் பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு - தலா 4 டேபிள்ஸ்பூன், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெருங்காயத்தூள், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வெறும் கடாயில் பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைக்கவும்.
சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், குழம்பு வைக்க முடியாத அவசர காலங்களில் கை கொடுக்கும் இந்த மல்டி பருப்புப் பொடி.
தனியா-மிளகு-சீரகப்பொடி
தேவையானவை: தனியா - 4 டேபிள்ஸ்பூன், மிளகு - 10, சீரகம் - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்கவும். இதை, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
இந்தப் பொடியை, ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பொடி சேர்த்து, எண்ணெய், நெய் கலந்து சாப்பிடலாம்.
சீரக ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், சீரகம் - 4 டீஸ்பூன், பூண்டு - 15 பல், சோம்பு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு... கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
முதல் நாள் இரவே, கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தயார் செய்து கொண்டால், காலையில் சாதம் வடித்துக் கலந்தால், ஈஸியாக வேலை முடிந்து விடும்.
தக்காளி சாதம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, தோலுரித்த பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நசுக்கிய இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை போட்டு வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கி, அதில் வடித்த சாதம் போட்டு கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
லெமன் ரைஸ்
தேவையானவை: அரிசி - 200 கிராம், எலுமிச்சம்பழம் - 2, கடுகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். வறுத்த கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.
கறிவேப்பிலைப் பொடி
தேவையானவை: கறிவேப் பிலை (ஆய்ந்தது) - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்க... சுவையான கறிவேப்பிலைப் பொடி ரெடி!
சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
கத்திரிக்காய் ரைஸ்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, பிஞ்சுக் கத்திரிக்காய் - 6, வெங்காயம் - ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.
ஈஸி காரக் குழம்பு
தேவையானவை: புளி - 50 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர் விட்டு, குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்!
கிரீன் வெஜிடபிள் ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - அரை கிலோ, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சாதம் போட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைட் டிஷ்.
புதினா ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், ஸ்வீட் கார்ன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புதினா சேர்த்து மணம் வரும் வரை வதக்கி, உப்பு சேர்த்துக் கலந்து, மீண்டும் வதக்கவும். இந்தக் கலவையில் உதிர்த்த ஸ்வீட் கார்ன், சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
பட்டர்-புதினா-வெஜிடபிள் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஆய்ந்த புதினா, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது, புதினா பேஸ்ட் மற்றும் வெண்ணெயைத் தடவவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவலை அதன் மீது பரவலாகத் தூவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். இதேபோல், தேவைப்படும் அளவுக்கு தயார் செய்யவும். தயார் செய்த பிரெட்களை டோஸ்டரில், டோஸ்ட் செய்து பரிமாறவும். அல்லது தவாவில் டோஸ்ட் செய்தும் பரிமாறலாம்.
நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட்
தேவையானவை: நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.
முதல் நாள் 'பார்ட்டி', 'ட்ரீட்' என அதிகம் கொழுப்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் அதை பேலன்ஸ் செய்வதற்கு, இந்த சத்து நிறைந்த எளிய உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
வெஜிடபிள் ரவா உப்புமா
தேவையானவை: ரவை - கால் கிலோ, பட்டாணி - 100 கிராம், வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 4, கடுகு - கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். அது, கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை மெதுவாகத் தூவவும். எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
மிக்ஸட் தயிர் சாதம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், புளிப்பில்லாத தயிர் - 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துக்கள் - தலா கால் கப், திராட்சை - 20, பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரித் துண்டுகள் - தலா ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு, வேக விட்டு நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி நீங்கலாக, மற்ற அனைத்து காய்கறிகள், பழங்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். அதில் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, நன்கு மசித்த சாதம், கொத்தமல்லி சேர்த்துக் கலக்க... சுவையான மிக்ஸட் தயிர் சாதம் ரெடி!
பூண்டுப் பொடி
தேவையானவை: பூண்டு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை கருகாமல் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறிய தும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடிக் கவும். அதனை ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப் படும்போது பயன் படுத்திக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு மசாலா பொரியல்
தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
இது, எல்லா வகையான 'வெரைட்டி ரைஸ்', சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது.
தக்காளி ரசம்
தேவையானவை: தக்காளி - கால் கிலோ, புளி - 50 கிராம், பச்சை மிளகாய் - 1, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வடிகட்டிய புளித் தண்ணீரை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து நுரைத்து, ஒருமுறை கொதித்ததும் பெருங்காயத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
காப்ஸிகம் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, கடுகு - கால் டீஸ்பூன். நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதம் சேர்த்துக் கலக்க... காப்ஸிகம் ரைஸ் ரெடி!
பேபி கார்ன் பஜ்ஜி
தேவையானவை: பேபி கார்ன் - 6, கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
இதேபோல் வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்!
வெஜிடபிள் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், கேரட் துருவல், பட்டாணி, நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய ஸ்வீட் கார்ன் கலவை - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறி தளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள எல்லா காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன தும், தண்ணீர் விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ் சேர்த்துக் கிளறவும். வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, உலர்ந்த திராட்சை - 20, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத் துள்ள எல்லா பொருட் களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.
சேமியா உப்புமா
தேவையானவை: சேமியா - ஒரு பாக்கெட், கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, ஒரு பங்கு சேமியாவுக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவைப் போட்டுக் கிளறவும். வெந்ததும், எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.
சேமியாவுக்குப் பதிலாக கோதுமை ரவை, அரிசி ரவை சேர்த்தும் செய்யலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி ஏற்றது.
தக்காளி சட்னி
தேவையானவை: வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ, இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... தோலுரித்த வெங்காயம், கழுவிய தக்காளி போட்டு நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வும். இவற்றையெல்லாம் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடுகு தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறலாம்.
இந்த சட்னி இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள டேஸ்ட்டாக இருக்கும்.
பீட்ரூட் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது, பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். வெந்ததும் இறக்கி, சாதம் சேர்த்துக் கலக்கவும்.
வெங்காய சட்னி
தேவையானவை: வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இது சிறந்த காம்பினேஷன்.
தயிர் பச்சடி
தேவையானவை: தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, கேரட் துருவல் கலவை - ஒரு கப், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகள், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கினால்... தயிர் பச்சடி ரெடி!
இது, வத்தல் குழம்பு சாதம், வெஜிடபிள் ரைஸூக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்!
வெஜிடபிள் கூட்டு
தேவையானவை: கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட... வெஜிடபிள் கூட்டு தயார்!
மாங்காய் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கலந்து, பின்னர், மாங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கினால், மாங்காய் ரைஸ் ரெடி!
பாசிப்பருப்பு தால்
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, தக்காளி சேர்த்து வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்பு-தக்காளியை அதில் சேர்த்து, உப்பு போட்டு, கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.
இதனை, சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
கோவைக்காய் ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு கப், கோவைக்காய் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 6 பல், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில், நெய் விட்டு கடுகு தாளித்து... சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதங்கியதும் கோவைக்காய் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment