My Blog List

Tuesday 14 February 2012

மனசையும் `ஸ்மார்ட்'டாக வைக்கும் உணவு வகைகள்!

 

டேஸ்டி ராகி பால்ஸ்

தேவை

கேழ்வரகு மாவு 1 கப்

வெல்லப்பொடி 1/2 கப்

பொடித்த வேர்க்கடலை 1/2 கப்

வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி

உப்பு ஒரு சிட்டிகை

சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி

செய்முறை:

1. கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

2. தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும்.

3. அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும்.

4. கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும்.

5. இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும்.

இந்த டேஸ்டி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும்.

இரும்புச் சத்து எக்கச்சக்கமாக உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது.

ராகி எங்கே கிடைக்கும்?

சுத்தப்படுத்தி மாவாக அரைக்கப்பட்ட ராகி மாவு சென்னையில் அண்ணாசாலை காதிபவனில் அருமையாகக் கிடைக்கிறது. மற்ற ஊர்களில் ராகி தாராளமாகக் கிடைக்கிறது.

இதுமட்டுமல்ல ஜென்டிமேன்! இதோ மற்றும் ஒரு மலிவான ஐட்டம்.


தினை மாவு
எள்ளு புட்டிங்

தேவை

தினைமாவு -1 கப்

சுத்தப்படுத்திய எள்ளு- 1 கப்

வெல்லப்பொடி -1 கப் அல்லது தேன்

- 1 மேஜைக்கரண்டி

கிஸ்மிஸ் பழம் - 10
பொடித்த பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி
பால் -1 கப்

செய்முறை:

தினைமாவுடன் வெல்லப்பொடி, எள்ளு ஆகியவைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தேவையானால் சிறிது பால் தெளித்துஉதிரி உதிரியாக கலக்கவும்.

இத்துடன் கிஸ்மிஸ் பழங்கள் மற்றும் பொடித்த பாதாம் பருப்பைக் கலந்து பரிமாறவும். சூப்பர் டேஸ்ட்டான சமைக்காத, இயற்கை வளம் மிக்க பக்குவம் இது. திகட்டாத தெள்ளமுது!

மருத்துவக் குணங்கள்

உறுதியான உடல்கட்டைப் பெறலாம். உடல் சோர்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் சக்தியை அளிக்கும். விளையாட்டு வீரர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.


எள்ளு சட்னி

தேவை

சுத்தப்படுத்தி வறுத்தெடுத்த எள்ளு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

சிறிய தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 2

புளி - சுண்டைக்காய் அளவு

தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி
தாளிதம் செய்ய கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு.

செய்முறை

வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், தக்காளி, புளி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியே வதக்கவும்.

மிக்சியில் மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு, புளி ஆகியவற்றுடன் உப்பை சேர்த்து சுற்றி, அத்துடன் தக்காளி, எள்ளு, தேங்காய்த்துருவலையும் சேர்த்து மைய அரைத்தெடுத்து தாளிதம் செய்யவும்.

நெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவை பிரமாதமாக இருக்கும்.

இதென்ன எள்ளு புராணம் பாடுகிறேன் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது.

* எள் உள்ளுக்கு மட்டும் ஆரோக்கியம் இல்லை; மாறாக அழகை பாதுகாக்கவும் செய்கிறது.

* சிறுவயது முதல் எள்ளெண்ணெயை அதாங்க நல்லெண்ணெய் தலைக்குத் தடவி வர முடி `கருகரு'வென்று வளரும்.

* நல்லெண்ணெய் குளியல் உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்கு குளுமையூட்டி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் வாய் ரணம், குணமாகி ஈறுகளைப் பலப்படுத்தும்.

இன்னமும் இளமை தெறிக்கும் கட்டுடலுக்குச் சொந்தமான அந்த பிரபல நடிகரின் அபிமானத்தைப் பெற்றது இந்த எள்ளு என்றால் வியப்பாக

இருக்கிறதா? தினசரி அவருடைய டயட்டில் எள் இடம் பெறுகிறது என்ற தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். `கிண்'ணென்ற உடல்கட்டைப் பெற எள்ளுக்கே உங்கள் ஓட்டு.


இன்னமும் ஒரு எளிய ரெசிபி. மிகவும் விலை மலிவான பொருள் இது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்

இந்த செழிப்பான கிழங்குகளைக் கொண்டு உடலை உரமாக்கலாம் வாங்க!

தேவை

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 250 கிராம்,

வெல்லம் 50 கிராம், நெய் - 1 தேக்கரண்டி, ஏலப்பொடி 2 சிட்டிகை.

செய்முறை

வள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மேல் தோல் மற்றும் நடுவே இருக்கும் நாரை நீக்கி நன்கு மசிக்கவும். இதோடு சுத்தமான வெல்லம், நெய், ஏலப்பொடி சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். செம டேஸ்ட்டான அதிரடி திடீர் தயாரிப்பு. கிழங்கு அதிகமாகக் கிடைக்கும் போது வாங்கி வற்றலாக்கி சேமித்து வைக்கலாம். அடிக்கடி இதை ருசித்து வந்தால் கட்டுடல் `மிஸ்டர்'களுக்குச் சொந்தம்!

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts